காற்றை கிழித்துக்கொண்டு சென்றது கார். கதவருகே கண்மூடி அமர்ந்திருந்த காஞ்சனாவை கண்ணாடி வழியே கண்டபோது காதலைவிட காமமே முன் நின்றது.
"காதலுக்கும் காமத்திற்கும் நூலிழை தான் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ" என்று நண்பனுக்குக் கூறியது நினைவுக்கு வந்தது.
காரின் வேகத்தை மிஞ்சியது மனம். வேகத்தடைக்கு வழி தேடி தவித்தேன். இருள் சூழ்ந்த தனிமையும், குளிர்சேர்ந்த காற்றும், அவள் கவர்ச்சிமிகு கண்களும் என்னை கிரங்க வைத்தது.
'வெள்ளைத் தாமரை தேவதையே என் வேண்டுகோளை கேளடியே' என்று அவள் மடியில் முகம் புதைக்க மனசு ஏங்கியது. ஈரக்காற்றோடு சாரல் சேர்ந்து கொள்ள கார் ஜென்னல்களை ஏற்றிவிட்டாள்.
'சாரல் உள்ளும் அடிக்கிறதே', மூடமுயன்றேன். மழை வலுக்க மரநிழலில் காரை நிறுத்தினேன். உள்ளும் வெளியும் குளிர் அடிக்க குற்ற உணர்ச்சியில் குன்றிப் போனேன்.
அவளை இறுக்க அனைத்து உதடோடு உதடு சேர்த்து உடலோடு உடல் சேர்த்து அவளுக்குள் பின்னிப் பினைந்தேன் கற்பனையில்!
'கற்பனையே இனிக்கிறதே, துணிந்து செய்' என்றது காமுக மனது. கண்கள் மூடி இன்னும் அமர்ந்திருந்தது அந்த கனிச்சோலை.
முன்கதவை திறந்து இறங்கி பின்கதவை திறக்க முயன்றேன். பயம் கவ்விக் கொண்டது. திடம் பெற ஒரு சிகரெட் பற்ற வைத்தேன். மூன்று மாதங்கள் அவளுடன் பழகியும் கடந்த ஓர் மாதமாக அவள் மேல் ஏற்பட்ட தாகத்தின் தாக்கம் என் பெருமூச்சாக புகையோடு சேர்ந்து வந்தது. இது தவறு என்று உணர்த்திய அறிவை ஆசை வெகுவாக வென்றது.
'காமுகா கெடுத்துவிட்டாயே என் வாழ்க்கையை?!' கதறுவாளே அவள். இவைகள் காதுகளில் விழ மறுத்தன.
காரை நோக்கி நடந்து பின்கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். மெதுவாக அவள் கைகளை பற்றினேன் சில்லிட்டது மெல்ல நகர்த்தி அவள் இடுப்பை பற்றினேன். அவள் இன்னும் கண்கள் மூடியபடியே இருந்தாள். அவள் முகத்தில் ஓடிய மெல்லிய புன்னகை என்னை தைரியம் பெறச் செய்தது. அவள் மேலாடை நீங்கிய அழகு என்னை அள்ளிச் சென்றது. அவளை அனைத்து அவள் மார்பில் முகம் புதைத்தேன் மனதில் பயம் தோன்ற அவளை நேர்கொண்டு பார்த்தேன். எப்பொழுதும் ஏறி இறங்கி அசையும் அவள் மார்புகள் அசைவின்றி இருந்தது. நாடி பிடித்துப் பார்த்தேன் துடிப்பு இல்லை. அவள் கையிலிருந்த காகிதத்தை கண்டேன். பிரித்துப் படித்தேன்.
அன்புள்ள ஷீராம் அவர்களுக்கு,
முதலில் என் நன்றி கலந்த வணக்கத்தை சொல்கிறேன். நீங்கள் என் வாழ்வில் மிகச்சிறந்த திருப்பத்தை ஏற்படுத்திய மனிதர். உங்களை நான் தெய்வமாகவே வணங்கினேன். என் கணவர் மறைவிற்குப்பின், என்னை ஒரு தாசியாகவே அனைவரும் பார்த்தனர். நீங்கள் மட்டும் தான் என் தேகத்தை தாண்டி என் உள்ளத்தை கண்டு அடைக்கலம் தந்தீர்கள். இதனால் தான் உங்களுக்கு எத்துனை அவச் சொற்கள், என் பொருட்டு நீங்கள் பெற்ற அவமானங்களை நான் அறிவேன். ஓர் ஆணும் பொண்ணும் இச்சமுதாயத்தில் சேர்ந்து நண்பர்களாக வாழ இயலாது. அதை ஏற்கும் நல்லுள்ளம் எவருக்கும் இல்லை.
என் கணவர் இறந்து மூன்று மாதங்கள் நீங்கள் என்னை காப்பாற்றி வந்தீர்கள். என்னை தவறான எண்ணத்தில் ஒரு பார்வை கூட பார்த்ததில்லை. இது என்னை வெகுவாக கவர்ந்தது. என் கணவரின் நண்பர் என்ற உணர்வைத் தாண்டி உங்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. இது சரியா தவறா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் உங்கள் நண்பனிடம் நீங்கள் கூறியது என்னை தலைகுனியச் செய்தது.
'மனசு சுத்தமாய் இருந்தா சிவப்புவிளக்கு பகுதியில் கூட நேர்மையாக வாழலாம். அவ நெருப்புடா' என்று நீங்கள் கூறியதை கேட்டு என் நரம்புகள் துடித்தன. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ஏற்றவள் நான் இல்லை. என் மனதில் காலான் முளைத்துவிட்டது.
'ஊராரின் ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொய்யாக்கலாம்' என்று அடிக்கடி நீங்கள் சொல்லுவீர்கள். உங்கள் நேர்மைக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. என் பொருட்டு பல தியாகங்கள் செய்த உங்களுக்கு நான் செய்யக்கூடியது நீங்கள் களங்கமின்றி வாழ, என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த உங்கள் நிழலில் என் வாழ்வை முடித்து கொள்கிறேன். நீங்கள் நன்றாக வாழ என் இறைவனை வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்
காஞ்சனா
மனம் அவமானத்தால் புழுங்கிற்று. என் உண்மை ரூபம் தெரியாமல் இந்த காமுகனை கடவுள் என்று எண்ணி தன்னையே அழித்துக் கொண்டுவிட்டாள். என்னை மனிதனாக மாற்றிவிட்டு மாண்டுவிட்டாள்.
******************************
'ஷீராமச்சந்திர மூர்த்திக்கு அடுத்து எங்க வீட்டுக்காரர்தான். அவர் கூட சீதா தேவியை சந்தேகப்பட்டார். ஆனால் என் கணவர் என்னையும் சந்தேகிக்கமாட்டார்; எனக்கு துரோகமும் நினைக்ககூடமாட்டார்' என்று இன்னும் என் மனைவி மற்றவர்களிடம் கூறியது காதில் விழுந்தது.
'என்னப்பா தூங்கறீங்க வந்து பாடம் சொல்லித்தாங்க' என்று என் மகள் அழைக்க என் கடைமைகளை ஆற்ற எழுந்து சென்றேன், மனதில் என்றும் தேவதையாய் நிலைத்து நின்ற என்னவளுக்கு நன்றி கூறியடியே.
Friday, September 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கற்பனை. ஆனால் வசன நடை இயல்பாக இல்லையே.. அதிகம் பழைய எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்கின்ற பழக்கமா உங்களுக்கு?
திரும்பவும் வாசித்துப்பாருங்கள்..
இதில் கையாளப்பட்டிருக்கும் எத்தனை சொற்களை நாம் புழக்கத்தில் பயன்படுத்துகிறோமென்று...
Your stories have a O'Henry touch to it!!
Great work!!
Keep it going!! [:)]
Post a Comment